சிகரெட்டிற்கான வரியை 90 வீதமாக அதிகரிக்க கோரி வட பிராந்திய நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் சங்கானை பிரதான பஸ் தரிப்பிடத்தில் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டு ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்ட சிகரெட் வரியை 90 வீதமாக அதிகரிக்கும் தீர்மானம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக அதிகளவில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களாகவே உள்ளனர். இந்நிலையில் சிகரெட் வரியானது 90 வீதமாக அதிகரிக்கப்படும் போது சிகரெட் ஒன்றின் விலையானது கிட்டதட்ட 50 ரூபாயாக அதிகரிக்கும் இதன் பலனாக, தற்போதைய சிகரெட் பாவனையாளர்கள் வெகுவாக குறைவடைவதோடு. புதிதாக பழகுபவர்களின் வீதமும் பாரிய அளவில் குறைவடையும். மேலும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள அரசாங்கத்திற்கு மேலதிக இலாபமும் கிடைக்கும்.
உலக சுகாதார அமைப்பின் கருத்தின் படி சிகரெட் விலையானது நடைமுறையில் உள்ள விலையை காட்டிலும் 10 வீதத்தினால் அதிகரிக்கும் போது வளர்ந்து வரும் நாடுகளில் சிகரெட் பாவனையானது 6 வீதத்தினால் குறைவடையும். இவ்வாறு பல நன்மைகளைப் பெற்றுதரும் சிகரெட் வரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க வேண்டும் எனக் கோரியே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.