கிளிநொச்சி – பூநகரி பரமன்கிராய் வெட்டுக்காடு பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக காணியை சுவீகாரிக்கும் வகையில் மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் நான்காவது தடவையாக நிறுத்தப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை (09/05/2016) காலை 10 மணிக்கு குறித்த பிரதேசத்தில் பெரும் படை அம்மன் ஆலய காணி உள்ளிட்ட ஆறு குடும்பங்களுக்குச் சொந்தமான 22 ஏக்கா் காணியை இராணுவத்தினரின் தேவைக்கு சுவீகாிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக நில அளவை நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், பொதுமக்களின் கடும் எதிா்ப்பு காரணமாக இந்த செயற்பாடு நிறுத்தப்பட்டது.
படையினரின் தேவை கருத்தி காணி சுவீகாிக்கும் சட்டத்தின் 45 பிாிவிற்கு அமைய இன்று திங்கட்கிழமை நில அளவை செய்யப்படவுள்ளதாகவும், அதற்காக தங்களின் காணிகளை அடையாளப்படுத்தும் படி நில அளவை திணைக்களத்திடம் இருந்து கடந்த 3 ஆம் திகதி காணி உரிமையாளா்களுக்கு கடிதம் அனுப்பட்டிருந்தது. அதற்கமைய இன்று காலை நில அளவை மேற்கொள்ள குறித்த பிரதேசத்திற்கு சென்ற கிளிநொச்சி அரச நில அளவை ஆணையாளா் ஞா.கேதீஸ் தலைமையிலான குழுவினரை நில அளவை மேற்கொள்ளவிடாது மக்கள் தடுத்து நிறுத்தினாா். இதனை தொடா்ந்து நில அளவையாளா்கள் காணி உாிமையாளா்களிடமிருந்து எங்களுடைய காணிகளை எவரின் தேவைக்கும் வழங்கும் வகையில் நில அளவை மேற்கொள்ள அனுமதிக்கமாட்டோம் என்ற கடித்தத்தை பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்று விட்டனா்.
நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் செ.கஜேந்திரன் ஆகியோரும் மக்களுடன் இணைந்து குறித்த காணிகளை இராணுவத்தின் தேவைக்கு சுவீகாிக்கும் முயற்சிக்கு எதிா்ப்பு தொிவித்திருந்தனா். கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் 3701.5 ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதில் அரச காணி, தனியார் காணி, திணைக்களங்களுக்குச் சொந்தமான காணி மற்றும் ஒதுக்கீட்டு காணி என்பன உள்ளடக்கப்படுகின்றன.
அந்த வகையில் அரசகாணிகள் 360 ஏக்கரும், தனியார் காணிகள் 229.5 ஏக்கரும், திணைக்களங்கள் மற்றும் ஒதுக்கீட்டு காணிகள் 3112 ஏக்கர் காணிகளும் உள்ளடங்குகின்றன. இதில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 231 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 201 ஏக்கர் காணியும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் 3086.5 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளியில் 183 ஏக்கர் காணியும் முப்படையினரிடம் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.