யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியிலுள்ள குடிநீர் விவகாரம் தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போது அவர் முன்னிலையாகாத நிலையில் குறித்த வழக்கு மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கழிவு எண்ணெய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவு எண்ணெய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் குறித்த வழக்கு, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நீதிமன்ற நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வடமாகாண விவசாய அமைச்சர் நிகழ்வொன்றிற்கு சென்ற காரணத்தால் இந்த வழக்கு விசாரணைக்கு அவர் வருகை தர முடியவில்லை என வடமாகாண சபையின் அபிவிருத்தி அலுவலகர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் கடிதம் ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்டார்.
இதன்போது குறித்த கடிதத்தை நிராகரித்து நீதவான், பிடிவிறாந்து பிறப்பிக்க முற்பட்ட நிலையில் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ.சி.வரதராஜா நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது பொதுமக்கள் நலன்சார்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், சட்டத்தரணிகளான சோ.தேவராஜா, கே.சுகாஷ் சோபிதன், பி.பார்த்தீபன் ஆகியோரும், வடமாகாண சபையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ.சி.வரதராஜாவும் முன்னிலையாகியிருந்தனர்.