இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற சென்னை எப்சி அணியின் கேப்டன் எலானோ ப்ளூமர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவாவில் உள்ள படோர்டாவில் நேற்றிரவு இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழாவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் கோவாவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் கேப்டன் எலானோ ப்ளூமர் வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி சக வீரர்களுடன் மைதானத்தை வலம்வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், போட்டிக்குப் பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது கோவா அணியின் உரிமையாளர் தத்தராஜ் சல்கான்கரை அவமதித்தது மற்றும் தாக்கியதற்காக எலானோ ப்ளூமரை கோவா போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முன்னதாக போட்டியை பார்க்கவந்த கோவா முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் விரைவாக மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, சல்கான்கர்தான் என்னை இந்தப் போட்டியைக் காண அழைத்திருந்தார். அவர் சென்னை எப்.சி அணியின் கேப்டன் எலானோ ப்ளூமரால் அவமதிக்கப்பட்டு தாக்கபடுவதை கண்டதால், பரிசு வழங்கும் நிகழ்ச்சி வரை காத்திருக்க வேண்டும் என்று தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை எப்.சி. அணி சாம்பியன் பட்டம் வென்ற சில மணி நேரங்களிலேயே அதன் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.