முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்றில் இருந்து முறிப்பு ஊடாக குமுழமுனைக்குச் செல்லும் உள்வீதியை உரிய முறையில் புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் ஐம்பது வருட பழமை வாய்ந்த இந்த வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீதி தற்காலிகமாக புனரமைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மைக்காலமாக பெய்த கனமழை காரணமாக குறித்த வீதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு, வீதிகள் குன்றும், குழியுமாக காணப்படுவதால் இந்த இடங்களில் நீர் தேங்கி மழைநீர் நிற்பதுடன், அந்த வீதியூடாகப் போக்குவரத்து செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முறிப்பு பால்பண்ணை பகுதியில் வீதியை மூடி வெள்ள நீர் இன்றும் தேங்கிக் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்தில் உள்ள குறைபாடுகளை அறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தமக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.