தீவகம் தம்பாட்டி கிராமத்தில் அவர்களது கிராம நிகழ்வில் மேடை ஏற்றுவதற்காக தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த பண்டாரவன்னியன் நாடகத்தை இடைநிறுத்தும் முயற்சியாக நேற்றுமுன்தினம் பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று குறித்த நாடகத்தை பழக்கி மேடையேற்ற வேண்டாம் என தடை விதித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று குறிப்பிட்ட மக்கள் காரணத்தை கேட்பதற்காக பொலிஸ் நிலையம் சென்றபோது அந்நாடகத்தில் அரசாங்க விரோத கருத்துக்கள் அடங்கியுள்ளன அந்நாடகத்தை தாம் பார்வையிட வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். பின்னர் பொலிசாரோடு புலனாய்வுத்துறையினரும் இணைந்து சுமார் நான்கு மணி நேரமாக குறிப்பிட்ட நாடகத்தை பார்வையிட்டுள்ளனர்.
தமிழர்களுடைய வீரம் செறிந்த வரலாற்றோடு உணர்வு பூர்வமாக கலந்துவிட்ட மாவீரன் பண்டார வன்னியனின் வரலாற்றை மீள் நினைக்ககூடாது என்கின்ற சிந்தனையோடு இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதன்மூலம் மக்கள் அரசாங்கத்தின் கபடங்களுக்கு எதிராக மாறிவிடுவர் என அரசாங்கமும் அவர்களுடைய படைகளும் அஞ்சுகின்றன். இச்சம்பவமானது மக்களுடைய உரிமையை நேரடியாகவே மறுக்கின்ற ஒரு சம்பவமாகும். அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள கலாசார உரிமைகளைப் பறிக்கும் ஓர் செயற்பாடாகும். இவ்வாறான அடாவடிச்செயற்பாடுகள் மூலமாக தமிழர்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்திவிட முடியும் எனவும் அவர்களை அடிமைகளாக நடத்தலாம் என யாராவது கருதுவார்களேயானால் அது மிகப்பெரிய முட்டாள்தனமாகவே இருக்கும்.இவ்வாறான செயற்பாடுகள் தமிழர்களுடைய உணர்வுகளை தொடர்ச்சியாகவே சீண்டிப்பர்க்கின்றது . இச்சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசாங்கமானது தமிழர்களின் கலை கலாசார உணர்வுகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும் எனவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நன்றி.
பா.கஜதீபன்
வடமாகாண சபை உறுப்பினர்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு