தமிழீழத் தேசியச்சின்னங்களைப் பயன்படுத்தி மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த புலம்பெயர் குழு ஒன்றை கடந்த மாதம் (2018/06) டென்மார்க் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளிகள் தொடர்பான செய்திகளை டென்மார்க் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
குறித்த குழுவினர் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, ஆட்களை அச்சுறுத்துதல் உட்பட பல்வேறு மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அவர்களுக்கு எதிராக பதினொரு (11) குற்றச்செயல்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமான நிலையில் , குறித்த நபர்கள் சிறைவைக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிய நாடுகடத்தப்படும் நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் தமது குழுவின் அடையாளங்களாக தமிழீழத் தேசியச் சின்னங்களை பயன்படுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் போது தமிழீழத்தேசியக் கொடி, தேசியத்தலைவரின் புகைப்படம், தேசிய சின்னமான புலிச் சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் இந்த இழிசெயலால் டென்மார்க் வாழ் ஈழத்தமிழர்களின் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ள அதேவேளை, தமிழீழவிடுதலைப்புலிகளின் நற்பெயரைச் சிதைக்கும் விடயம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை குறித்த சமூக விரோதக் குழுவுடன் டென்மார்கில் செயல்பட்டுவரும் தமிழ் தேசியம் சார்ந்த அமைப்பு ஒன்றின் ஒருசில உறுப்பினர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதோடு குறித்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த அமைப்புடன் நெருக்கமாகவும் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்ற ஆண்டு இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் குறித்த அமைப்பினரை தொடர்புகொண்டு இது போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தும்படி தமிழ் இனப்பற்றாளர்கள் வன்மையாகக் கண்டித்திருந்தனர்.
எனினும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த குற்றச் சம்பவங்களை மறுத்ததுடன், சந்தேக நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு “அவர்கள் தமிழ்த் தேசியவாதிகள் என்றும், நீண்டகாலமாகத் தமிழ் உணர்வோடு செயற்படுபவர்கள்” என்றும் கூறியுள்ளனர்.
அவர்களின் இந்த அசமந்தப்போக்கே இன்றைய இந்த நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ள தமிழ் இன பற்றாளர்கள், இது ஒரு பாரதூரமான ஒரு பொறுப்பற்ற செயல் என்பதோடு, இனிவரும் காலங்களிலாவது இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் சமூக விரோதிகள், தமிழீழத் தேசியச் சின்னங்களையும் அடையாளங்களையும் பயன்படுத்துவதை முற்றாகத்தடுப்பதற்கு உரிய முயற்சி எடுக்கவேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர்.
இதுவே எமதுதலைவருக்கும், எமதுஉரிமைகளுக்காக மரணித்த மாவீரர்களுக்கும், எமது இன மக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான கடமையாக இருக்கும் என்பது எல்லோரும் நினைவில்கொள்ளவேண்டிய அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.