தலைவர் பிரபாகரனின் மேசையை இறுதி வரை அலங்கரித்த ஓர் பெண் அரசியல் கைதியின் கைக்குட்டை!

ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தியாகங்கள் என்பது எண்ணிலடங்காதது. அதே போல் எமது ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்தியாகங்கள் எண்ணற்றவை. மேலும் தாய் நாட்டிற்காக வாழ்நாள் முழுதும் சிறையில் அடைபட்டு சித்திரவதை அனுபவிக்கும் கொடுமை மிக மோசமானது. இவை எல்லாமே ஈழத்தில் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவே. ஆனால் இப்போதும் கூட ஈழத்தில் மக்கள் படும் கஷ்டத்தை பற்றியோ நாட்டுக்காக போராடி இன்றுவரை சிறையில் அடைபட்டுக்கிடக்கும் அரசியல் கைதிகள் பற்றியோ கண்டுகொள்ளாது தங்களது சுகபோக வாழ்வை பேஸ்புக் போன்ற சமூக வலைதளத்தில் போட்டு பெருமை கொள்ளும் சில ஈனப்பிறவிகளும் எமது இனத்தில் உள்ளார்கள் என்பது வேதனையே.

தலைவர் பிரபாகரன் தியாகங்களை மிகவும் மதித்தவர் என்பதற்கு ஓர் சம்பவத்தினை நினைவு படுத்த விரும்புகிறேன். தேசியத் தலைவரின் மேசையில் எப்போதும் நாளாந்த அலுவலக தேவைக்கான பொருட்கள் இருக்கும். அவரது உதவியாளர்கள் அதனை சரிபார்த்து தினமும் ஒழுங்குபடுத்தி வைப்பார்கள்.

தனது தாயை பார்க்க விடுமுறையில் சென்றிருந்த ஒரு போராளி அன்று கடமைக்கு வந்ததும் வழமை போல் தலைவரின் மேசையை சுத்தமாக்கிக் கொண்டிருந்தார். அப்போது மேசையில் ஒரு கைக்குட்டை அழகாக மடித்து தலைவர் பார்வைக்கு ஏற்றால் போல் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் போராளியும் மேசையில் ஏன் கைக்குட்டை இருக்க வேண்டும் என கருதி அதனை எடுத்து உள்ளறையில் ஒரு பெட்டியில் போட்டு விட்டார்.

தலைவர் பிரபாகரனும் வழமைபோல் தூங்கி எழுந்து தளபதிகளை சந்திக்க அழைத்துவிட்டு அவரது சந்திப்பு அறைக்கு வந்து அமர்கிறார். அப்போது மேசையை அவதானித்த தலைவர் என்றுமில்லாதவாறு மிகுந்த கோபத்தோடு உதவியாளரை அழைத்து இங்கிருந்த கைக்குட்டை எங்கே என கேட்டதும் உதவியாளரான அந்தப்போராளியும் அதை எடுத்து உள்ளே போட்டு விட்டேன் அண்ணா எனக்கூறுகிறார்.

அப்போது அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் தலைவர் பிரபாகரனுக்கு வந்த கோபத்தை. அது யார் அனுப்பிய கைக்குட்டை என தெரியுமா உனக்கு? தியாகம் என்றால் என்ன என்று தெரியுமா உனக்கு? நீ எனக்கு அருகில் இருந்து நன்றாக சாப்பிட்டு தூங்கும் உனக்கு என்ன தெரியும்…என மிகக் கோபமாக திட்டித்தீர்த்தார். அது மட்டுமல்லாமல் உடனடியாக அந்தக் கைக்குட்டை மேசைக்கு வரவேண்டும். இல்லையெனில் நீ எனக்கு உதவியாளனாக இருக்கத் தேவையில்லை. என மிகுந்த கோபத்தோடு திட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

உடனடியாக இரட்ணம் மாஸ்டர் மற்றும் தலைவரின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த செங்கையான் என எல்லோரும் கைக்குட்டையை தேடத் தொடங்கி ஒருவாறு எடுத்து விட்டனர். அதனை மீண்டும் அழகாக மடித்து தலைவரின் மேசையில் வைத்த பின்னர், தலைவரிடம் இரட்ணம் மாஸ்டர் சென்று அண்ணா கைக்குட்டை கிடைத்து விட்டது என கூறியதும் தலைவரும் வெளியே வந்து கதிரையில் அமர்ந்தார். அன்று மதிய உணவு பரிமாற அந்தப் போராளி மீண்டும் திட்டு வாங்க வேண்டியிருக்குமோ என பயத்தில் தலைவரின் அருகில் வரவில்லை.

மதிய உணவு முடிந்த பின்னர் தலைவர் அந்தப் போராளியை அழைத்து ‘’இது யாருடைய கைக்குட்டை என உனக்குத் தெரியுமா? எனக் கேட்டார். உதவியாளனும் இல்லை அண்ணா தெரியாது என கூறினார். அப்போது தலைவர் ‘’இது பல வருடங்களாக இலங்கை சிறையில் இருக்கும் ஒரு பெண் போராளி எனது பிறந்தநாளுக்கு சிறையில் கிடைத்த பொருட்களை கொண்டு தைத்து அனுப்பிய கைக்குட்டை. அந்த பெண் போராளி எங்கள் நாட்டுக்காக எத்தனை கொடுமைகளையும் சித்திரவதைகளையும் தாங்கினார் என உனக்குச் சொல்லி புரியவைக்க முடியாது. எனக்கூறி இந்த கைக்குட்டை எப்போதும் எனது மேசையில் இருக்க வேண்டும் என அந்த உதவியாளனுக்கு கூறினார்.

அதே போல் இறுதி வரை தலைவரின் பார்வையிலேயே அந்த அரசியல் கைதியின் கைக்குட்டை  இருந்தது. ஒவ்வொரு போராளியின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மதித்தவர் தலைவர். இவர்களின் தியாகங்களாலேயே தமிழினத்தின் வீரத்தை உலகம் மீண்டும் பார்த்து வியந்தது என்பது உண்மை.

அரசியல் கைதிகைக்குட்டைபிரபாகரன்பெண்போராளிவிடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment