பாலியல் வல்லுறவு வழக்கு இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

திருக்கோவில் சங்கமன்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை குழுப்பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வழக்கில் மூன்று எதிரிகளையும் கல்முனை மேல் நீதிமன்றம் குற்றவாளிகளாக கண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்முனை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தொடரப்பட்ட மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கில் கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் இதற்கான தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

திருக்கோவில் சங்கமன்கண்டியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவரை கடந்த 11-12-2005 இல் கடத்திச் சென்று ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் குழுப்பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் மூன்று எதிரிகள் மீது சட்டமா அதிபரால் கல்முனை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறித்த சிறுமியைக் கடத்திச் சென்று முதலாவது எதிரியான அண்ணாப்பயல் சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் இரண்டாம் எதிரி பாக்கியராஜா மூன்றாம் எதிரி செந்தில்குமார் ஆகியோர் உடன் காவலில் இருந்து ஒத்துழைத்ததாகவும் குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கல்முனை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம். இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்ற போது சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி நி. நாகரட்ணம் வழக்கை நெறிப்படுத்தினார்.

விசாரணையின் போது தாம் கடத்தப்பட்டு பாழடைந்த வீடொன்றுக்குள் கொண்டு செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதை சம்பந்தப்பட்ட சிறுமியாகவிருந்த பெண்ணும் அவரது பெரியம்மா பெரியப்பா ஆகியோரும் சாட்சியமளித்தனர்.

சிறுதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதை வைத்திய கலாநிதி உறுதிப்படுத்தியும் மன்றில் சாட்சியமளித்தார்.

இந்நிலையில் கடந்த 04 -11-2014இல் மூன்று எதிரிகளையும் ஆட்கடத்தல் பாலியல் (குழு) வல்லுறவு குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மருத்துவ சாட்சியம் ஒப்புறுதி செய்கின்றது எனவும் தீர்ப்பில் தெரிவித்தார்.

இதன்படி முக்கிய முதலாவது எதிரி அண்ணாப்பயலுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும், 2ஆம், 3ஆம் எதிரிகளான பாக்கியராஜா செந்தில்குமார் ஆகியோருக்கு தலா ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

அத்துடன் முதலாம் எதிரி இரண்டு இலட்சம் ரூபாவையும் 2ஆம், 3ஆம் எதிரிகள் தலா 25 ஆயிரம் ரூபாவையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டுமென்றும் தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டார்.

இளஞ்செழியன்எதிரிகல்முனைகுற்றவாளிகுழுபாலியல்சிறுமிதிருக்கோவில் சங்கமன்கண்டிதீர்ப்புநீதிமன்றம்பிரதேசம்வழக்கு
Comments (0)
Add Comment