இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி – மறவன்புலவு பிரதேச வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதியே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இது குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இதுவரை முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் 15 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த அணியை ஆதவன் மாஸ்டரே வழி நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதவன் மாஸ்டரின் வீட்டை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோதும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந் நிலையிலேயே நேற்று முன் தினம் கட்டுநாயக்க ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது ஆதவன் மாஸ்டர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
போர் நடைபெற்ற காலத்தில் மன்னார் மற்றும் வன்னி பிரதேசங்களில் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்த ஆதவன் மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
சுமார் ஒன்றரை மாதம் புனர்வாழ்வு முகாமில் இருந்த இவரை பின்னர், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.