பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்களப்படைகளை அகற்றுக பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை .


பெண்களின் பாதுகாப்புக்கு வடபகுதியில் சிறீலங்கா படைகள் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே வட பகுதியில் இருந்து சிறீலங்கா படைகளை அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்த வட மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினமான நேற்று மேற்படி கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை குடும்பத்தலைமைப் பெண்கள் ஒன்றியம் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்தனர். இந்த மனுவிலே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எமது பிரதேசம் சிறீலங்கா படை மயமாக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் சுதந்திரமாக நடமாடமுடியாது உள்ளது. எனவே தமிழர் பகுதியில் சிறீலங்காபடை பிரசன்னம் குறைக்கப்பட வேண் டும். பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதார மற்றும் வீட்டு வசதிகள் பூர்த்தி செய்து வழங்கப்பட வேண்டும்.

அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் மூலம் தரப்படும் உதவித்திட்டங்கள் பெண்களின் திறன்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வழங்கப்பட வேண்டும். காணி உறுதிகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் பெறுவதற்கு சிறீலங்காஅரசின் உதவிகள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.

பெண் தலைமைத்துவமான குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தேவைகள் குறித்து ஆற்றுப்படுத்தல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் அடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று வடமாகாணத்தில் பெண்கள் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடை பெற்றன.

” அவளது ‘மகிழ்ச்சி தேசத்தின் மகிழ்ச்சி” எனும் தொனிப் பொருளில் சர்வதேச பெண்கள் தினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் ” விழுது ‘ ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். மாவட்ட சிக்கனகடன் வழங்கும் கூட்டு றவுச்சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் சமாச அலுவலகத்திலும், கொட்டடி கிராமிய அபிருத்திச்சங்கம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சனசமூக நிலையக் கட்டடத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்.மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுங்கள் எனும் கருப்பொருளை முன்வைத்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும், கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப் பின் ஏற்பாட்டில் பெண்கள் கட்டமைப்பை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்திலும், பெண்களின் உற்பத்தி திறனை கெளரவிக்கும் முகமாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் ,அத்துடன் வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் பெண்கள் அமைப்புகளின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கவனவீர்ப்புப் பேரணி ஒன்றை அக்கரைப்பற்றில் நடத்தியுள்ளன.
———————————

சர்வதேச மகளிர் தினம;கவனவீர்ப்புப் பேரணிபெண்களின் படைகளை அகற்றி
Comments (0)
Add Comment