மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் படையினரால் திடிரென நீர்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணியை பலாத்காரமாக அபகரித்து படை முகாம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலையடிவட்டைப் பகுதியில் பிரதான வீதியை ஒட்டியதாக இந்த பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டு வருகின்றது.
சமாதான காலம் நிலவுவதாக அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில் மக்களை அச்சமூட்டும் வகையில் இந்த படைமுகாம் அமைக்கப்பட்டு வருவது தொடர்பில் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிரதான வீதியை அண்டியிருந்த நீர்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணியினை வலுக்கட்டாயமாக பெற்றே இந்த படைமுகாம் அமைக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த படைமுகாம் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி அந்த காணிகளை பொதுமக்களின் பாவனைக்கு வழங்க நடவடிக்கையெடுக்குமாறு பொதுமக்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.