மானுஸ் தீவு தடுப்பு முகாம் சட்டத்துக்கு முரணானது! உச்சநீதிமன்றம்

பப்புவா நியுகினியில் ஈழ அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மானுஸ் தீவு அகதி முகாம் சட்டத்துக்கு முரணானது என்று, பப்புவா நியுகினியின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது அந்த நாட்டின் யாப்புக்கு உட்பட்டது அல்லவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த அகதி முகாமில் ஈழ அகதிகளுடன் மேலும் பல நாட்டவர்களும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதிகளாக செல்கின்றவர்களை அந்த நாட்டின் அரசாங்கம் இந்த முகாமிற்கே மாற்றி வருகிறது.
இதனை அவுஸ்திரேலியா நியாயப்படுத்தி வருகின்ற போதும், சர்வதேச அளவில் இதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இந்த முகாமை மூடுமாறு வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் பப்புவா நியுகினியின் எதிர்கட்சியினால் இந்த முகாமிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதன் விசாரணையில், அந்த நாட்டின் அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் 34 பக்க தீர்ப்பறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த முகாமை நீக்குவதற்காக படிப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்த்ரேலியாஈழ அகதிகள்தடுப்பு முகாம்தீர்ப்புநீதிமன்றம்பப்புவாமானுஸ் தீவுயாப்பு
Comments (0)
Add Comment