முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வாளர்களின் தலையீட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களின் தலையீட்டால் முல்லைத்தீவில் தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு  மாவட்ட உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். நலவொகொ குரா மொச்சி தலைமையிலான யப்பானிய தூதரக அதிகாரிகள் நேற்று வட மாகாண சபையின் உறுப்பினரை நேற்று மாலை 4 மணிக்கு அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அன்ரனி ஜெகநாதன்

தேர்தல் நடைபெற்று பல மாதங்களாகியும் வடமாகாணசபையை சுதந்திரமாக இயங்கவைக்க முடியவில்லை. அதற்கு பிரதான காரணம் ஆளுநரின் ஒத்துழைப்பின்மை. இதனால் எம்மால் எமது மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் எமது மக்களுக்கும் எமக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துவதற்காகவே அவ்வாறு செயற்படுகிறது என்று தெரிவித்தார். வட மாகாணத்திற்கான நிதியுதவிகள் உடனுக்குடன் கிடைப்பதில்லை. அதற்கான சட்டங்களை மாற்ற முற்படும் போது அதற்கு தடையாக ஆளுநர் காணப்படுகிறார். அமர்வின் போது நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எவையும் அரசால் நிறைவேற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் இராணுவத்தினர் கொத்து குண்டுகளைப் பயன்படுத்தினர். அத்துடன் இறுதி யுத்தத்தில் உறவினர்களால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் கூட இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போனோர் பட்டியலில் இணைக்கப்பட்டு தற்போது அவர்களுக்கான மரண சான்றிதழ்கள் வழங்க முயற்சிக்கப்படுகிறது.

சிங்கள மக்களின் காணிகள் என பொய்யான உறுதிகள் வழங்கப்பட்டு தமிழரின் பூர்வீக  காணிகள் அபகரிக்கப்படுவதோடு அவற்றில் பௌத்த கோவில்கள் அமைக்கப்படுகின்றன அவை  நிறுத்தப்பட வேண்டும் என்றார். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் வெளிநாட்டு  இராஜதந்திரிகளைச் சந்திக்க விடாது இராணுவம்  பல தடைகளை ஏற்படுத்துகின்றது. காணாமல் போனோர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் உள்ளக விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்

மக்கள்முல்லைவாழ்
Comments (0)
Add Comment