முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்கள்படும் அவலங்களையும் தேவைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பார்வையிட வேண்டுமென முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் பிரதி அவைத்தலைவர் ம.அன்ரனி ஜெயநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு நேற்று திடீர் விஜயம் செய்த முதலமைச்சரை சந்தித்தபோதே இவ்வேண்டுகோளினை விடுத்துள்ளார். நடைபெறவிருந்த பாடசாலையின் கட்டிட திறப்புவிழாவிற்கு உரிய நேரத்தில் வரமுடியாத காரணத்தால் நிகழ்வுக்கு முன்பே பாடசாலைக்கு விஜயம் செய்து பாடசாலையின் தேவைகள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள் பற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆராய்ந்து அறிந்து கொண்டார். இதே நேரத்தில் வடக்கு மாகாணசபையின் பிரதிஅவைத்தலைவர் ம.அன்ரனி ஜெயநாதன், முல்லைத்தீவு மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்களான கனகசுந்தரசுவாமி மேரிகமலா குணசீலன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அப்பகுதி மக்கள் பிரதி அவைத் தலைவரிடம் தெரிவிக்கையில், நல்ல காரியம் ஒன்றிற்காக ஒரு இடத்தில் எல்லோரும் ஒன்று கூடும்போது புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் அல்லது அதற்கான காரணத்தை அவர்களிடம் தெரிவித்த பின்பே பயத்தின் மத்தியிலும் எமது செயற்பாடுகளை தொடர முடிவதாக முறையிட்டனர்.