அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உலகுக்கான உணவு, உடை, உறையுள் உள்ளடங்கிய அனைத்தையும் நீங்களே வழங்கு கின்றீர்கள். ஆனால் உங்களது தேவைகள் மட்டும் நெடுங்காலமாகப் பூர்த்தி செய்யப்படாமலே உள்ளன. அரசியல்வாதிகள் தொடக்கம் முதலாளி வர்க்கம் வரையும் உங்கள் உழைப்பைத் தங்கள் இலாபமாகவும், அதிகாரமாகவும் மாற்றி ஆடம்பரமாக வாழும் பொறிமுறையைத் தத்ரூபமாக உருவாக்கி வாழ்கின்றனர்.
நீங்கள், கரடுமுரடான வாழ்க்கையை வாழ்ந்து வாழ்நாளை கழித்துவருகிறீர்கள். ஒவ்வொருமுறையும் தொழிலாளர் உரிமைக்காக நடத்தப்படும் மேதினம் தேர்தலுக்கான வாக்குச்சேகரிப்பின் முன்னோட்ட மாகவே நடத்தப்படுகின்றது. தொழிலாளர்களாகிய நீங்கள் விழித்துக்கொள்ளும் வரை உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழும்வரை இந்தநிலை தொடர்ந்துகொண்டே இருக்கும்.
உங்கள் உரிமைக்கான இந்த நாளில் உங்களது சுபீட்ச வாழ்வுக்காக பிரார்த்திப்பதோடு சில கோரிக்கைகளையும் முன்வைக்கின்றோம்.
1. தமிழர் உரிமைக்கான நிரந்தரத் தீர்வு கால இழுத்தடிப்பின்றி வழங்கப்படவேண்டும்.
2. ஆக்கிரமிப்புக்குட்பட்டிருக்கும் நிலங்கள் மற்றும் கடற்பரப்புக்கள் விடுவிக்கப்பட்டு விவசாயம், மீன்பிடி மற்றும் இதர தொழிலாளர்களின் தொழில்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
3. பல்கலைக்கழக கல்விமுறைகள், தொழில்சார் கல்விக் கட்டமைப்பாக மாற்றப்படவேண்டும்.
4. அரசியல் நன்மைகளுக்காக தகுதியற்றவர்களுக்குத் தரப்படும் வேலைவாய்ப்புகள் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவேண்டும்.
5. வடக்கு – கிழக்கு கடற்பிராந்தியங்களில் தெற்கு மீனவர்களின் பிரசன்னம் தவிர்க்கப்படவேண்டும்.
6. அரசியல் மற்றும் அதிகாரப்பிரயோகத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் அத்துமீறிய குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்-– என்றுள்ளது.