யாழில் ஸ்ரீ புலனாய்வுத்துறையினரால் இளைஞன் கடத்தல்! விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மல்லாகம் நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் என தம்மை அடையாளப்படுத்திய நான்கு நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவில் உடையில் திரவியநாதன் நகுலேஸ்வரன் எனும் இளைஞனின் வீட்டுக்கு சென்று அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அது தொடர்பில் அவரது மனைவி வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது தாம் எவரையும் கைது செய்யவில்லை என கூறி பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
சில நாட்களின் பின்னர் நகுலேஸ்வரன், தனது மனைவிக்கு புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றில் இருந்து தொடர்பு கொண்டு ,தன்னை புலனாய்வு துறையினர் கைது செய்து அனுராதபுரத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும், இந்த தகவல்களை எவரிடமும் கூற வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
அந்நிலையில் நேற்று முன்தினம் நகுலேஸ்வரனின் மனைவியின் தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்திய இனம் தெரியாத நபர் ஒருவர், உங்கள் கணவரை நாளைய தினம் (புதன்கிழமை) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அவா் மீது உள்ள தாபரிப்பு வழக்குக்காக முற்படுத்த உள்ளோம் எனவும் இது தொடர்பில் எதுவும் எவருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) நீதிமன்றில் முற்படுத்துவதற்காக நகுலேஸ்வரனை சிவில் உடையில் வாகனம் ஒன்றில் நால்வர் அழைத்து வந்திருந்தனர். அதனை கண்ட மனைவி, கணவருடன் கதைக்க முற்பட்ட வேளை , இன்றைய தினம் கணவனை நீதிமன்றுக்கு அழைத்து வருவோம் என வேறு எவருக்கும் தெரியப்படுத்தினீர்களா என கணவனை அழைத்து வந்தவர்கள் வினவினர்.
அதற்கு மனைவி சட்டத்தரணிக்கு தெரியப்படுத்தினேன் என கூறியதும் நகுலேஸ்வரனை அழைத்து வந்தவர்கள் மன்றில் முற்படுத்தாமல் அவரை மீண்டும் தம்முடன் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. யூட்சனின் கவனத்திற்கு சட்டத்தரணி க.சுகாஸ் கொண்டு சென்றார். அதன் போது இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும், சட்டவிரோதமான கைதுகள், தடுத்து வைப்புக்கள், கடத்தல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றனவா? இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்றில் சட்டத்தரணி க. சுகாஸ் விண்ணப்பம் செய்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைக்களை மேற்கொள்ளுமாறு நீதிவான் ஏ. யூட்சன் பொலிசாருக்கு உத்தரவிட்டார். அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கடத்தல்நீதிபதிபுலனாய்வுத்துறையாழ்ப்பாணம்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment