யாழ்ப்பாணம் முகாமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறு முயற்சியாளர்களிற்கான பயிற்சி ஆரம்பம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு இதுதொடர்பாக மாவட்ட அரச அதிபர் மேலும் உரையாற்றுகையில் ,
யாழ். குடாநாட்டில் மட்டும் இன்று படித்த இளைஞர் , யுவதிகளில் 34 ஆயிரம் பேர் வேலையில்லாது இருக்கின்றனர். இவ்வாறு வேலை வாய்ப்பு இன்றி உள்ளவர்கள் மாவட்டச் செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் பல ஆயிரம் பட்டதாரிகளும் வேலைவாய்ப்பினைக் கோரி பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு வேலை வாய்ப்பின்றி உள்ள இளையோர் பாரிய மன உலைச்சலை எதிர் கொண்டு சிறிய வேலையாவது கிடையாதா என தவிக்கின்றனர்.
இதன் வெளிப்பாடே அண்மையில் மாகாண சபையால் சிற்றூழியருக்காக விண்ணப்பம் கோரப்பட்டபோது பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்திருந்தனர்.
இவ்வாறு குடாநாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது குடாநாட்டில் இயங்கிய பல பாரிய தொழிற்சாலைகள் யுத்தம் காரணமாக அழிவடைந்தமையே முக்கிய காரணமாகவுள்ளது.
இவற்றினை மீள இயக்குவதற்கு கடந்த 7 ஆண்டு காலமாக நாமும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம். அவை உடன் பழைய நிலமையை அடையும் அறிகுறிகளும் தென்படவில்லை.
எனவே குடாநாட்டில் பாரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் வரைக்கும் இளையோர் காத்திருக்காது இவ்வாறான சிறு முயற்சிகளிலும் ஈடுபட முன் வரவேண்டும்.
அவ்வாறு ஈடுபட முன் வருபவர்களிற்கு நாமும் முடிந்தளவு உறுதுணையாக இருப்போம். உங்களிற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
இவற்றிற்கு உதாரணமாக கூறுவதானால் சமுர்த்தி திட்டத்தின் கீழ் பல சிறு முயற்சியாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு உருவான பலர் இன்று மேலும் பலருக்கு தொழில் வாய்ப்பினை வழங்குவதோடு அவர்களின் உற்பத்திப் பொருளிற்கான உரிய சந்தை வாய்ப்பும் கிடைக்கின்றது.
எதிர்காலத்தில் சிறு முயற்சியாளர்கள் அதிகரித்து அதன் மூலம் அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் உங்களிற்கான ஏற்றுமதி வாய்ப்பினையும் எம்மால் ஏற்பாடு செய்து தரமுடியும்.
அவ்வாறு தற்போதும் சில முயற்சியாளர்கள் தமது பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர். அரச வேலைதான் வேண்டும் என்ற மாயை தற்போது மாறிவருகின்றது.
உண்மையில் அரச பணியென்பது பலரின் கண்கானிப்பு நிர்வாகம் என்பதுடன் பல சவால்களையும் எதிர் கொள்ள வேண்டும்.
தனியார் துறையில் அதுவும் சுய முயற்சியினில் முயன்றால் நிச்சயமாக அதிலும் முன்னுக்கு வர முடியும்.
தற்போது உலக நாடுகளில் இருந்து வரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கூட இவ்வாறான சிறு முயற்சியாளர்கள் மற்றும் தனியாரையே ஊக்குவிப்பதில்தான் அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.
இதனால் இவ்வாறானவர்களிற்கு தற்போது அதிக வாய்ப்புக்கள் உண்டு எதிர்காலத்தில் சர்வதேச உதவிகளும் கிட்டும்.
இதன்பிரகாரம் இனிவரும் காலம் சிறு முயற்சியாளர்களிற்கும் சந்தர்ப்பமான காலம். இவ்வாறு உதவிகள் வரும்போது முயற்சியாளர்களை நாம் இனம் காட்டுவோம்.
அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம் . அண்மையில் வந்த தூதுவர்கள் கூட இதனையே எமக்குத் தெரிவித்தனர். என்றார்