வடக்கில் 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன்களுக்கு தடை

வடக்கில் 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன்களுக்கு வரும் ஜூன் 5ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் விஜிதா, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஸ்ரெலா ரதனியுட் ஆகியோருடன் யாழ்ப்பாணத்திலுள்ள விவசாய அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி வரையான மூன்று மாத காலப் பகுதிக்குள் பொலித்தீன் பாவனையால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அவற்றின் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மாகாண சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, வணிகர் சங்கங்கள் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இந்தச் செயற்பாடுகளில் துறை சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

ஜூன் 5ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன்களை தடை செய்வதுடன் ஏனைய பிளாஸ்ரிக்குக்கு மாற்றானவற்றை தேடிக் கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அவற்றினை பயன்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்படவேண்டும். என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் நாளில் இருந்து ஜூன் 5ஆம் திகதி முதல் 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன்களை வடக்கில் பாவிப்பது, காட்சிப்படுத்துவது, விற்பனை செய்வது அனைத்தும் தடை செய்யப்படுகின்றது. இதனை மீறுவோர் மீது இலங்கை மத்திய அரசின் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சங்கப்பிரதிநிதிகள்வர்த்தகர்
Comments (0)
Add Comment