இது தொடர்பில் அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யுத்த காலங்களிலும், அதற்கு முன்னரும் வடகிழக்கு மாகாணங்களின் கல்வித் தரம் உயர்ந்தே காணப்பட்டது. இதற்கான சரியான அளவு கருவியாக கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையை மட்டுமே கொள்ள முடியும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையையோ, க.பொ.த. உயர்தர பரீட்சையையோ கொள்ள முடியாது. க.பொ.த. உயர்தர பரீட்சையின் சித்திக்கு பல காரணிகள் உள்ளன. ஆனால் க.பொ.த. சாதரணதர சித்திக்கு தனியே பாடசாலைக் கல்வியை மட்டுமே கூறமுடியும்.
க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றோர் வரிசையில் யாழ்ப்பாண மாவட்டம் 21ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தரும் விடயமாகும். இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஒன்பது இடங்களுக்குள்ளும் வடகிழக்கு மாகாணங்களின் மாவட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை.
மன்னார் மாவட்டம் 10ஆம் இடத்திலும், அம்பாறை மாவட்டம் 13ஆம் இடத்திலும், வவுனியா மாவட்டம் 16ஆம் இடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 17ஆம் இடத்திலும், யாழ்ப்பாணம் மாவட்டம் 21ஆம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 23ஆம் இடத்திலும், முல்லைத்தீவு மாவட்டம் 24ஆம் இடத்திலும், கிளிநொச்சி மாவட்டம் 25ஆம் இடத்திலும் காணப்படுகின்றன. இந்த தரவரிசையானது எப்போதும் நிகழாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
தமிழர் பிரதேசங்களில் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மாகாண மட்டத்தில் உள்ள பல குறைபாடுகள் அதற்கு முழுக்காரணமாக அமைகின்றன.
குறிப்பாக முறையற்ற ஆசிரிய இடமாற்றங்கள், முறையற்ற அதிகாரிகளின் இடமாற்றங்கள், அரசியல் தலையீடுகள், கல்வியில் அனாவசியமான வெளியாரின் தலையீடுகள், இவற்றைவிட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களின் சுயமான சிந்தனைக்கு ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டைகள் ஆகியவையே இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றன.
இவை எல்லாவற்றையும் விட வடகிழக்கு மாகாணங்கள் கல்வியில் திட்டமிட்டு அழிகப்படுகிறது என்ற உண்மையை நாம் அனைவரும் உணரவேண்டும் என்பதோடு இன்னும் வெளிப்படுத்த முடியாத அபாயகரமான நிலைமைகள் உள்ளன என்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டி நிற்கின்றது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.