யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தில், வவுனியா மாவட்ட தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, புதனன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை மைதாத்தில் ஒன்று கூடிய பாதிக்கப்பட்ட மக்கள் ஏ9 வீதிவழியாகப் பேரணியாக, அரச செலயகத்திற்குச் சென்று அரச அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தனர். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சந்தர்ப்பத்தில் தமது பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளோடு பெரும் எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.