வவுனியாவில் கால்நடைகள் மேய்ச்சல் இல்லாமல் அவலம்!

வவுனியா நகரசபையினால் வீதியோரங்களில் நிற்கும் மாடுகள்  பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டு வரும் நிலையில் தமது பொருளாதார வளமான மாடுகளை விற்பனை செய்வதை தவிர வேறு வழியில்லை என வவுனியா கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக, பல மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவையனைத்தும் நகரசபை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இச் செயற்பாடு தொடர்பில் கால்நடை வளர்ப்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக உள்ளது. இது இங்குள்ள மக்களின் கலாசாரத்துடன் ஒன்றிய செயற்பாடு. குறிப்பாக விவசாயமானது வேலியடைந்தும் கால்நடை திறந்து விடப்பட்டும் வளர்க்கப்படும் நிலையே உள்ளது.
மேய்ச்சல்தரை இன்மை மற்றும் வயல்நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளமை காரணமாகவே மாடுகள் வீதிகளுக்கு வரும் நிலையில் உள்ளது. தற்போது வாழ்வாதார செயற்பாடு என அரசாங்கதினால் கால்நடைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் நகரசபையின் இச் செயற்பாடுகளுக்கு நாம் அதிகளவான நிதியை தண்டமாக செலுத்தவேண்டியுள்ளமையால் கால்நடை வளர்ப்பை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்ந்து வருமானால் மாடுகளை இறைச்சிக்கு விற்க வேண்டிய நிலையே எமக்கு ஏற்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பில் வவுனியா நகரசபை செயலாளரிடம் வினவிய போது, வவுனியா நகரத்தில் அண்மைக்காலத்தில் கால்நடையால் விபத்துகள் அதிகரித்து வருகின்றது.
எனவே, நகரசபை விபத்துக்களை கட்டுப்படுத்த தன்னாலான சில செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.  பல முறை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளை பிரதான வீதிகளில் விடவேண்டாம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடித்து தண்டம் அறவிடவேண்டிய நிலை ஏற்படும் என அறிவித்தல் வழங்கியிருந்தோம்.
எனினும், கால்நடை வளர்ப்பாளர்கள் அதனை உதாசீனம் செய்தமையினால் நாம் எமது செயற்பாட்டில் இறங்க வேண்டி ஏற்பட்டது. மேய்ச்சல் தரை இல்லை என்பது உண்மையான விடயம். எனினும் இதனை கால்நடை வளர்ப்பாளர்கள் உரிய அதிகாரிகளிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அவலம்இல்லாமல்கால்நடைகள்மேய்ச்சல்வவுனியாவில்
Comments (0)
Add Comment