விசுவமடுவில் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை விரட்டிச் சென்ற மாணவனை அந்த யானை தூக்கி எறிந்து மிதித்துத் துவம்சம் செய்ததில் தலை நசுங்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ளது விசுவமடு மற்றும் தருமபுரம் பகுதிகள். விசுவமடுவின் நாச்சிக்குடா கிராமத்தில் நேற்றுப் புகுந்த யானை கொலைவெறியாட்டம் போட்டது. ஊர்மனைக்குள் பயிர்களை அழித்து கண்ணில் பட்டதை எல்லாம் புடுங்கி எறிந்து அட்டகாசம் செய்தது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
உடனே ஊரவர்கள் திரண்டு அதனைக் காட்டுக்குள் விரட்டினர். எனினும் அது திரும்பி வந்து கிராமத்தில் அட்டகாசம் செய்தது.
சாவு வீடு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சில இளைஞர்கள் ஊருக்குள் யானை புகுந்துள்ளது என்பதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு சென்ற நால்வரும் யானையின் பிடிக்குள் மாட்டிக் கொண்டனர்.
கொலை வெறியுடன் துரத்திய யானையிடமிருந்து தப்ப ஆளுக்கொரு பக்கமாக அவர்கள் சிதறி ஓடினர். ஆனால் மூவர் மட்டுமே தப்பிக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஒருவர் காணாமற்போயிருந்தார். இதையடுத்து அவரைத் தேடி கிராம மக்கள் காட்டுக்குள் இறங்கினர். ஓரிடத்தல் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது காணாமற்போனவரின் சட்டையின் ஒரு துண்டு. அந்த மரத்தில் சிலர் ஏறிப் பார்த்தபோது, காணாமற்போயிருந்த இளைஞரின் சடத்தை வைத்துக் கொண்டு அருகிலுள்ள ஓர் இடத்தில் யானை நிற்பதைக் கண்டனர்.
பெரும் பிரயத்தனப்பட்டு யானையை விரட்டிவிட்டுப் பார்த்தபோது காணாமற் போயிருந்த இளைஞர் உயிரிழந்திருந்தார். பழையகமம், முரசு மோட்டை, கிளிநொச்சியைச் சேர்ந்த -18 வயது சிவசுப்பிரமணிய கஜானன் என்கிற கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் 2014 கலைப் பிரிவில் கல்விகற்கும் மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்றிரவு அவரது சடலம் காட்டில் இருந்து மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த இருபது வருடங்களில் இப்படியான துயரசம்பவங்கள் அந்த மண்ணில் இடம்பெறவில்லை.தற்போது விசுவமடு கிராமங்களுக்குள் யானை புகுந்து அட்டகாசம் செய்து ஒருவரைக் கொன்று போட்டிருப்பது இதுவே முதல் தடவை என்றும் இனி தொடரப்போகும் இப்படியான சம்பவங்கள் பெரும் வேதனையை தருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.