இரவு 11.20 மணியளவில் வியாபார நிலையம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த தகவலை அயல் வீட்டுக்காரர் தொலைபேசியில் தெரியப்படுத்தியதனைத் தொடர்ந்து உரிமையாளர் விரைந்து சென்று பார்த்த போது முற்றாக வியாபார நிலையம் எரிந்திருந்தது. தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் அறியப்படவில்லை. வியாபார நிலையத்தில் காணப்பட்ட மேசை மற்றும் அதனுள் இருந்த 50 ஆயிரம் ரூபா பணம் என்பனவும் எரிந்துள்ளன. அத்துடன் வியாபார நிலையத்துடன் சேர்ந்து அவர்கள் வசிக்கும் வீடும் காணப்பட்டுள்ளமையால் வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்த நிலையில் குடும்பம் நிர்க்கதிக்குள்ளான நிலையில் உள்ளது.
நான்கு பிள்ளைகள் கல்வி கற்கின்ற குடும்பத்தில் அவர்கள் கற்றல் உபகரணங்கள், பாடசாலைச் சீருடை உள்ளிட்ட ஆடைகள், தேசிய அடையாள அட்டைகள், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் யாவும் தீக்கிரையாகியுள்ளன.
தரம் 11, 8, 7, 1 இல் கல்வி கற்கும் மாணவர்களில் மூவரும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள். இவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெற்றோல் விற்பனையிலும் ஈடுபடும் குறித்த வியாபார நிலையத்தில் சம்பவம் இடம்பெற்ற அன்று இரவு மூன்று லீற்றல் பெற்றோல் காணப்பட்டதாகவும் அவற்றை எடுத்து பிறிதொரு இடத்தில் வழமை போன்று வைத்துவிட்டு சென்ற நிலையில் அதில் ஒரு லீற்றல் பெற்றோல் போத்தலுடன் காணாமல் போயுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.