விநாசியோடை , கௌதாரிமுனை , மன்னித்தலை ஆகிய பகுதிகளில் 119 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களில் 70 குடும்பங்களிற்கு மட்டுமே இன்றுவரை வீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய 49 குடும்பங்களும் இன்று வரை மாட்டுத் தொழுவத்தினை ஒத்த கொட்டில்களிலேயே தமது வாழ்க்கையினை கொண்டு செல்கின்றனர்.
இக் கிராமங்களை சூழ்ந்துள்ள கடலினை வாழ்வாதார தொழிலாக கொண்ட இக் கிராமத்தில் பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் குடிசைத் தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு குடிசைத் தொழிலாக அதிக பெண்கள் பன்ன வேலைகளையே ஈடுபட்டு தமது அன்றாட வாழ்வியலை எதிர் கொள்கின்றனர்.
இக் கிராமத்தைச் சூழ உள்ள பறட்டைக் காடுகள் பனை கூடங்களில் உலாவும் சுருட்டைப் பாம்புகளின் மத்தியில் அடிப்படை வசதியான இல்லிடம் இன்றி கிராமத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மாட்டுத் தொழுவங்களை ஒத்த சிறு கொட்டில்களிலேயே இன்று வரைக்கும் வாழும் மக்கள் தமக்கான வீட்டுத்திட்டங்களை வழங்குவதாக அதிகாரிகள் வாக்குறுதியளித்துள்ள போதிலும் வீடுகள்தான் இன்னும் கையில் கிடைக்கவில்லை. என்கின்றனர்.
இவ்வாறு ஓர் பாதுகாப்பான இருப்பிடம் இன்மையால் இயற்கையின் சீற்றங்களிற்கு அடிக்கடி பாதிப்புக்களை எதிர்கொள்வதோடு இதன் நிமித்தம் தினமும் ஒருவர் வீட்டைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடவேண்டிய சூழலும் உள்ளதாக குறிப்பிடுவதோடு இவற்றினைக் கருத்தில் கொண்டு வீட்டுத் திட்டங்களை விரைவாக வழங்க ஆவண செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். –