முல்லைத்தீவு வள்ளிபுனம் கணேஸ் குடியிருப்பில் உள்ள 267 வரையான குடும்பங்கள் பயன்படுத்தும் பிரதான வீதி இது வரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இந்த வீதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் கிராம கணேஸ் குடியிருப்பில் தற்போது 267 வரையான குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த நிலையில் அந்தக் குடும்பங்கள் பயன்படுத்தும் பிரதான வீதி புனரமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடத்தைக் கடந்த போதும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த வீதியில் உள்ள இரு பெரிய பாலங்களின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், உரிய முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்தப் பாலங்களுக்கு முன்பாகக் கிரவல் கொட்டப்பட்டு குவியலாகக் காணப்படுகின்றது.
இதனால் இந்த வீதியை பயன்படுத்துவோர் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்கின்றனர். எனவே மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த வீதியைத் திருத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்