அவுஸ்திரேலியா அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாமென கோரி நேற்று ஆப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.அதிக மக்கள் கூடுகின்ற மெல்பேர்ன் நகரில் Refugee action collective எனும் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அவுஸ்திரேலிய மக்கள் பலர் கலந்து கொண்டு “அகதிகளை ஆபத்தான இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்”, “அவர்களை தரையிறங்க அனுமதி”, அவர்களை தங்க அனுமதி” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இவ்வார்ப்பாட்டத்தில் பசுமைக்கட்சி சார்பில் செனற்றர் “ஜெனட் ரைஸ்” கலந்து கொண்டு உரையாற்றினார்.இதில் சில தமிழர்களும் கலந்து கொண்டனர். தமிழ் அகதிகள் சார்பில் 2009ஆம் ஆண்டு மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்ட 254 அகதிகளின் பேச்சாளரான நிமல் கலந்து கொண்டு பேசினார்.இலங்கைத் தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தான நாடாக இருந்து வருவதாகவும், இலங்கையில் தமிழர்கள் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதில்லை என கூறிய அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் கருத்து தவறு எனவும் அங்கு பேசியவர்கள் சுட்டிக் காட்டினர்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு தமிழர்கள் எவரையும் சந்திக்காது இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மேஜர் ஒருவரையே சந்தித்ததாகவும் அங்கு தமிழர்கள் சார்பில் கலந்து கொண்ட நிமல் எதிர்ப்பு வெளியிட்டார்.