மட்டக்களப்பு கல்குடா கல்வி வயத்திற்குப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் அதிகஸ்டத்தின் மத்தியிலும் அகில இலங்கை பாடசாலை கணிதப் போட்டியில் வரலாற்று சாதனைக்காக போராடி வருகின்றனர்.
அகில இலங்கை பாடசாலை கணிதப் போட்டியில் ‘அனுபவமே அறிவு’ எனும் தலைப்பிலான கணித நாடகப் போட்டியானது மாகாண மட்டத்தில் பல பாடசாலைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு முதலிடம் பெற்று தேசிய சாதனைக்காக தேசிய மட்டத்தை எதிர்பார்த்து முதலிடத்தைப் பெறுவதற்காக போராடி வருகின்றனர். வரலாற்றுச் சாதனைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் சித்தாண்டி பிரதேசம் பரந்த விரிந்த பிரதேசம் அதில் எங்கள் பாடசாலை கடந்த காலங்களில் இருந்து பல்வேறுபட்ட துறைகளில் பல சாதனைகளை தேசிய மட்டம் வரை பெற்றுள்ளது.
அதேவேளை கடந்த கால யுத்த சூழ்நிலையில் பல்வேறு பட்ட இடப்பெயர்வுகள், உயிரிழப்புக்கள், சொத்து இழப்புக்களைச் சந்தித்த நாங்கள் பல்வேறுபட்ட கஸ்டங்களில் வீடுகளில் எதிர்நோக்கி வருகின்றோம். எங்கள் பாடசாலையில் இருந்து கடந்த காலங்களில் இருந்து கணித ரீதியான போட்டிகளில் பங்குபற்றி மாவட்டம் வரை சென்ற நிலையில் இம்முறை மாகாண மட்டத்தையும் தாண்டி தேசிய மட்ட போட்டிக்காக தயாராக இருக்கின்றோம். தேசிய மட்டம் செல்வதற்கு போதிய பணப்பற்றாக் குறை பாடசாலையிலும் எங்கள் ஒவ்வொரு 25 மாணவர்களைக் கொண்ட இந்த குழுவுக்கு இருக்கின்றது.
கொழும்பு சென்று அதற்கான அனைத்து செயற்பாடுகளுக்கும் இன்றைய நிலையில் போதிய பணம் இல்லாத நிலை காணப்படுகின்றது. அதனால் கல்விக்காக முன்னின்று பல உதவிகளைச் செய்து வரும் புலம்பெயர் உறவுகள் மற்றும் நல்ல உள்ளம் படைத்த தனவந்தர்கள் எங்களின் வெற்றிப்படிக்கு உதவிகள் செய்தால் மாகாணத்துக்கும் மாவட்டத்திற்கும் எங்களின் வரலாற்றுக் கனவை தங்கு தடையின்றி நனவாக்கிப் பெற்றுக்கொள்வோம் என உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தார்கள்.