எமது சமூகம் இன்று பல்வேறு வழிகளில் சீரழிந்து வருகிறது- விக்னேஸ்வரன் ஆதங்கம்

நெருக்கடியான காலங்களில் ஒழுக்க விழுமியங்களை கைவிடாத எமது சமூகம் இன்று பல்வேறு வழிகளில் சீரழிந்து வருகிறது! விக்னேஸ்வரன் வருத்தம்! பல நெருக்கடியான காலங்களில் ஒழுக்க விழுமியங்களை கைவிடாத எமது சமூகம் இன்று பல்வேறு வழிகளில் சீரழிவுகளுக்கு உட்பட்டு வருவது மனவருத்தத்தை தருகிறதென, வெண்கரம் அமைப்பினரால் நடாத்தப்பட்டுவரும் படிப்பகத்திற்கான நிதி உதவியை வழங்கி வைத்து உரையாற்றிய தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நீதியரசருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி சமூக அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் உயர்ந்த நோக்கில் கல்விச் சேவையை வழங்கிவரும் வெண்கரம் அமைப்பின் ஆசிரியர் ஆளணியின் செலவுக்கான உதவித்தொகையை நோர்வே சுன்மோர பகுதி வாழ் ஈழத்தமிழர்களுடன் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வழங்கிவைக்கு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வு சுழிபுரத்தில் செயற்பட்டு வரும் வெண்கரம் படிப்பகத்தில் ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியது. மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது. வெண்கரம் அமைப்பின் இணைப்பாளர்களில் ஒருவரான பொன்ராசா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து முதன்மை இணைப்பாளர் கோமகன் அவர்கள் தலைமையுரையாற்றியிருந்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளரும் பொருளாதார விவகாரங்களுக்கான உப செயலாளருமாகிய பேராசிரியர் வி.பி.சிவநாதன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினர் இரா.மயூதரன் ஆகியோரது சிறப்புரையைத் தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி இணைப்பாளரும் முன்னாள் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவருமாகிய கிருஸ்ணமீனனும் கலந்து கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து வெண்கரம் அமைப்பின் கல்வி செயற்பாட்டிற்கான உதவித்தொகையாக ஒரு இலட்சம் ரூபா தொகையினை சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வெண்கரம் அமைப்பின் செயற்பாட்டாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஆதங்கம்
Comments (0)
Add Comment