கேப்பாபுலவு மக்கள் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக அனுபவித்த துன்பம் சொல்லி மாளாதவை. அது மாத்திரமல்ல கடந்த ஒரு மாத காலமாய் அந்த மக்கள் குளிரும் பனியிலும் அனல் வெயிலிலும் கிடந்தது நடத்தியது வெறும் போராட்டம் அல்ல. தவம். மக்களின் போராட்டத்தின் உறுதித் தன்மை தெரிந்தும்கூட இத்தனை நாட்கள் மக்களை வதைத்த சிங்கள அரசுக்கு முதலில் கண்டனத்தை தெரிவிப்பது அவசியமாகும். இந்தக் காணி விடுவித்தல் என்பதை எவரேனும் அரசியலாக்க முற்பட்டால் அதைவிட பெரிய துரோகம் வேறில்லை.
சிங்கள அரசு தான் இழைத்த இனப்படுகொலை – போர்க்குற்றங்களுக்கான ஜெனீவாவில் நல்ல பிள்ளை வேடமணிய கேப்பாபுலவை விடுவித்திருக்கலாம் என்ற செய்திகள் அரச தரப்பிலிருந்தே கூறப்படுகிறது. ராஜபக்சவையும் அரசையும் காப்பாற்றவே இப்படிச் செய்கிறோம் என்றும் தென்னிலங்கையில் கூறப்படுகிறதாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக கால அவகாசத்தை வழங்க கேட்டிருக்கும் சிங்கள அரசு இதுபோல சில நாடகங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புண்டு.
சிங்கள அரசு எங்கள் தாயகத்தில் பல்லாயிரம் ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்துள்ளத. பல்லாயிரம் ஏக்கர் காடுகளை ஆக்கிரமித்துள்ளது. கேப்பாபுலவில் விடுவித்தது வெறும் 40 ஏக்கர் மாத்திரமே. கிழக்கில் சம்பூரை விடுவித்தாலும் அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கரை சிங்களப் படைகள் இப்போதும் ஆக்கிரமித்துள்ளன. அங்கு தமிழ் கிராமங்கள் பல அழிக்கப்பட்டு சிங்களக் கிராமங்கள் ஆக்கப்பட்டுள்ளன. சம்பூர் விடுவிக்கப்பட்டால் அவை எல்லாம் விடுவிக்கப்பட்டவை என்று அர்த்தமா?
முல்லைத்தீவில் கேப்பாபுலவை அண்டிய பகுதிகளில் காடுகள், வீதிகள் என பல நூற்றுக் கணக்கான பகுதியை இராணுவம் இன்னும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. கேப்பாபுலவிலிருந்து குறுக்கு வழியில் புதுக்குடியிருப்பு செல்லும் வீதியை இப்போதும் இராணுவத் ஆக்கிரமித்து ஆள்கிறது. கேப்பாபுலவு போராட்டம் நிலத்திற்காக போராடும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதே. ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்பதைப் போல எவரும் செயற்படக்கூடாது என்பதும் முக்கியமானது.
சிங்கள அரசுக்கு தன் படைகளை தாயகத்தில் இருந்து வெளியேற்றும் எண்ணம் இருப்பதுபோலத் தெரியவில்லை. பல இடங்களில் இராணுவம் அகற்றப்படாது என்றே சொல்லியுள்ளது. ஆக. கேப்பாபுலவில் உள்ள இராணுவம் முல்லைத் தீவில்தான் நிலைகொள்ளப் போகிறது. கேப்பாலவு இராணுவமுகாமை மூடி இன்னொரு இடத்தில் திறப்பார்கள். இராணுவமுகாங்களுக்கு மூடு விழா இல்லை. இது நாம் அச்சமும் அவதானமும் கொள்ள வேண்டிய அவசிய இடமாகும்.
உண்மையில் கேப்பாபுலவு மக்கள் எமக்கு பெற்றுத் தந்த வெற்றியை நாம் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமானால் தமிழ் ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் நிலத்தை விட்டு இராணுவம் வெளியேறுவதுடன் முற்றாக வெளியேற வேண்டும் என்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எங்கள் மக்களை படுகொலை செய்த, எங்கள் மண்ணை ஆக்கிரமித்த இராணுவத்தை வெளியேற்றுவது மிக அடிப்படை உரிமையும் செயலுமாகும்.
கேப்பாபுலவை விடுவித்து ஜெனீவாவில் எங்களை மடக்க முற்பட்டால் அதற்கு எதிராக எமது பிரதிநிதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் குரல் கொடுக்க வேண்டும். அப்படி அவர்கள் மடக்கினால் அது மற்றொரு இனப்படுகொலையாக, இனப்பலியாக அமையும். அவர்கள், வடக்கு கிழக்கில் எப்படி இராணுவ முகாங்கள் உள்ளன? அவற்றினால் மக்களுக்கு என்ன கெடுதிகள் உள்ளன? சிங்கள புத்தர் விசாரைகளை ஏன் அமைக்கப்படுகின்றன என்று விளக்கம் அளிக்க வேண்டும்.
இதைச் செய்யத் தவறினால் சில துயிலும் இல்லங்களை விடுவித்தமை மற்றும் வலி வடக்கில் சில பகுதிகள், கேப்பாபுலவு விடுவித்தமையை காட்டி நல்லாட்சி அரசு எனப்படும் சிங்கள இனப்படுகொலை அரசு ஐ.நாவின் நற்சான்றிதழைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பும். அதற்குத்தான் எங்களுடைய தலைவர்களும் ஆசைப்படுகிறார்களா என்பதை சமூகத்தின் குரலாக வலியுறுத்துகிறோம்.
ஆசிரியர்,
செண்பகம்.
01.03.2017