இத்துடன் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடும் பிரன்டன் மெக்கல்லம் நேற்று தனது கடைசி இன்னிங்சில் முதல் 7 பந்துகளில் ரன் கணக்கை தொடங்காமல் தடுமாறினாலும், பின்னர் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து கலக்கியதுடன் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்சில் 79 பந்துகளில் 145 ரன்கள் குவித்து இருந்த பிரன்டன் மெக்கல்லம் இந்த டெஸ்டில் மொத்தம் 170 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார்.
கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1930-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்ல் நுனெஸ், இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி டெஸ்டில் 158 ரன்கள் (முதல் இன்னிங்சில் 66 ரன், 2-வது இன்னிங்சில் 92 ரன்) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
அத்துடன் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட முதல் கேப்டன் என்ற சிறப்பையும் பிரன்டன் மெக்கல்லம் தனதாக்கினார். 34 வயதான பிரன்டன் மெக்கல்லம் 101 டெஸ்டில் விளையாடி 12 சதம், 31 அரை சதத்துடன் 6,453 ரன்னும், 260 ஒருநாள் போட்டியில் ஆடி 5 சதம், 32 அரை சதத்துடன் 6,083 ரன்னும், 71 இருபது ஓவர் போட்டியில் விளையாடி 2 சதம், 13 அரை சதத்துடன் 2,140 ரன்னும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.