“தெற்கில் சிங்கள தேசம் பிறக்கட்டும்!”

இலங்கையின் தேசியம், சுயநிர்ணய உரிமை சார்ந்த பிரச்சினையை யாருமே சிங்கள மக்களின் நிலை சார்ந்து பார்ப்பது இல்லை.

இன்று முதல் நான் சிங்கள மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், சிங்கள தேசத்துகாகவுமே குரல் கொடுக்க போகிறேன்.

தமிழர்களை ஒன்று சேர்த்து தமிழர் தேசம் என்ற ஒன்றை கட்டியெழுப்புவது என்பது நடக்கிற காரியமா தெரியவில்லை. அந்த சப்போர்ட் ஐ சிங்கள மக்களுக்கு குடுத்தால் அவங்களாவது நல்லா இருப்பாங்கள்.

அதோடை இலங்கையில் முதன் முதலாக சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கேட்டவர்களும் அவர்களே. உலக சனத் தொகையில் மிகவும் குறைந்த சனத் தொகையை கொண்டவர்கள் அவர்கள். தங்கள் பண்பாடுகளையும், அடையாளங்களையும், மொழியையும், மதத்தையும் பேண, வளர்க்க அவர்களுக்கென இருப்பது அவர்களுடைய “சிங்கள தேசம்” மட்டுமே.

பாவம் அவர்கள்….

தம் மொழி மட்டுமே பேசப்படுகின்ற ஒரு தேசம் வேண்டும் என்பதற்காக 2000 ஆண்டுகளாக காத்திருப்பவர்கள்.

பார்க்கும் இடமெல்லாம் தம் “தெய்யோ” வீற்றிருக்க வேண்டும் என்பதற்காக தீயிலும் குதிக்க தயாராக இருப்பவர்கள்.

தம் பண்பாட்டை பலப்படுத்துவதற்காக மற்ற இனங்களின் பண்பாடுகளைக் கூட தமதாக்கிக் கொள்பவர்கள்.

தம் விடுதலைக்காக காவி உடையின் உள்ளேயே துவக்கை கொண்டு திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.

தமக்கான ஒரு தனி தேசத்துக்காக அவர்கள் செய்து வரும் அர்ப்பணிப்புகள்தான் எத்தனை?

அவர்கள் பிரயத்தனங்கள்தான் எத்தனை?

அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற திராணியற்ற சிங்கள தலைமைகள் தமிழ், முஸ்லிம் சந்தர்ப்பவாத கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு,

ஒரே நாடு
ஒரே தேசம்
ஒற்றையாட்சி

என சிங்கள மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றன.

போதாக்குறைக்கு தமிழ் இடதுசாரிகள் கூட அவர்களை புரிந்து கொள்ளாமல் அவர்களை வலிந்து இழுக்கிறார்கள் “ஒன்றாகச் சேர்ந்து வர்க்கப் போராட்டம் செய்வோம் வாருங்கள்” என்று.

பாவம் சிங்கள மக்கள். அவர்கள் அப்படி என்னத்தை தவறாகக் கேட்டுவிட்டார்கள்…

“சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கே”

அது நியாயமானதே!

“சிங்கள, தமிழ், முஸ்லிம் கூட்டு பாசிச ஆட்சியாளர்களே,

சிங்கள மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரியுங்கள்.”

“தெற்கில் சிங்கள தேசம் பிறக்கட்டும்!”

ஜெயவேவா!

-ஞானதாஸ் காசிநாதர்

சிங்கள தேசம்சிங்கள பௌத்த ஆதிக்கம்தமிழ் தேசம்
Comments (0)
Add Comment