வடமாகாண முதலமைச்சரையும், வடமாகாண சபையையும் கண்டபடி விமர்சித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய நேரத்தில், நாடாளுமன்றில் வைத்து பதிலடி கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வடக்கு மாகாணத்தில் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும், வட மாகாண சபையினரும் அரசுக்கு அனுமதி தரவில்லை. அவர்களும் அவற்றை செய்கிறார்கள் இல்லை. வட மாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “வடக்கு மாகாண முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டபடி விமர்சித்துள்ளார். இதற்கான பதிலை முதலமைச்சர் விக்னேஸ்வரனும், வடக்கு மாகாண சபையினரும் வழங்குவார்கள். எனினும், வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருப்பதனால் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் அதற்கான பதிலை உரிய நேரத்தில் வழங்குவேன். ஜனாதிபதிக்கான இந்தப் பதிலை நாடாளுமன்றில் வைத்துத் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.