மாலைத்தீவிற்கு போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 14ம் திகதி இலங்கையில் இருந்து வெலானா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
மாலைத்தீவு சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது அவரிடம் இருந்து 527 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மாலைத்தீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நைஜீரியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.