திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரசாங்க ஓய்வூதியச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பாண்டிச்சேரி, கோவா போன்ற இடங்களில் காணப்படுகின்ற ஒரு நிலத் தொடர்பற்ற சமஷ்டி முறையிலான ஆட்சியை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.
எமது மக்களின் பூர்வீகக் கிராமங்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதன் மூலமாக அழிந்து போயுள்ள தமிழர்களின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றை தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு நிம்மதியாக வாழமுடியும். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் நிலங்கள் தொடர்ந்து பறிபோய்க்கொண்டு இருக்குமானால், தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்தார்களா? என்ற பூர்வீகம் இல்லாது போய்விடும்.
இதற்கு நாம் உடந்தையாக இருக்கக் கூடாது. இதனைத் தடுப்பதற்கு அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
இதனை சரியான சந்தர்ப்பத்தில் சரியாக சிந்தித்து குறித்த நேரத்தில் செயற்படாது போனால், எமக்கான சிறந்த தீர்வை வெற்றி கொள்ள முடியாது போய்விடும்.
இதனால் தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு அடக்கு முறையிலான வாழ்க்கையை அனுபவிக்கும் நிலைமைகள் தோன்றலாம்.
இதேவேளை ஒட்டுமொத்த தமிழர்கள் மிக நீண்ட காலமாக தேடி நிற்கும் அரசியல் தீர்வுத்திட்டம் மிக விரைவில் எட்டப்படக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இது எமக்கு கிடைத்திருக்கின்ற கடைசிச் சந்தர்ப்பமாகும்.
இச்சந்தர்ப்பத்தினை புத்திசாதுரியமாக நாம் பயன்படுத்தும் நிலையில் இந்த வருடம் அல்லது அடுத்த வருடத்திற்குள் எமக்கான விடிவை பெற்றுக் கொள்ள முடியும். இந்த தீர்வு திட்டத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்ததன் அடிப்படையில் தனது தீர்வு திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. அதன்படி ஐக்கிய இலங்கைக்குள் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கு இணைந்த நிலத் தொடர்பிலான ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி அல்லது நிலத் தொடர்பு அற்ற சமஷ்டி முறையிலான ஆட்சி முறையையே நாம் கோரி நிற்கின்றோம் என்றார்.