புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு மக்களின் கருத்துக்களை பதிவுசெய்யும் செயற்பாடு தொடர்பாக அக் குழுவின் அங்கத்தவர் என்ற ரீதியில் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதமர் காரியாலயத்தால் புதிய அரசியல் உருவாக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை பதிவுசெய்வதற்காக உருவாக்கப்பட்ட குழுவானது இலங்கையின் சகல மாவட்டங்களிலும் தனது அமர்வுகளை நடத்தி வருகின்றது.
அந்தவகையில் இச் செயற்பாடானது நல்லதொரு விடயமாகும். ஏனெனில் இலங்கையின் 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பானாலும் சரி 1978ஆம் ஆண்டு யாப்பானாலும் சரி மக்கள் கருத்து உள்வாங்கி அமைக்கப்படவில்லை. அந்தவகையில் இது ஒரு புதிய முயற்சியாகும். குறிப்பாக கொழும்பில் இடம்பெற்ற அமர்வுகளில் பல முன்னேற்றகரமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இக்குழுவின் அமர்வுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் போது பெருமளவான தமிழ் மக்கள் இதில் தமது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் இது தமிழ் மக்களுக்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பம்.
உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் அமைப்பிலே தமிழ் மக்களுடைய உரிமைகள் எவ்வாறு நிலைநாட்டப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமது கருத்தை கூற வேண்டும். இதன்மூலம் மக்களது கருத்துக்கள் இக் குழுவின் ஊடாக அரசியல் அமைப்பு சபைக்கு கொண்டு செல்லப்படும்.
இக்குழுவில் கருத்துக்களை கூறுவதற்கு அரசியலமைப்பு தெரிந்திருக்க வேண்டிய அவசியமோ அல்லது சட்டவாக்க மொழிநடை தெரிந்திருக்க வேண்டிய அவசியமோ தேவையில்லை.
ஒரு சாதாரண நபர் புதிய அரசியல் அமைப்பு இவ்வாறு தான் இருக்க வேண்டும் என தன் மனதில் எழும் விடயத்தை கூற முடியும். அக் கருத்தை எழுதியும் கொடுக்கலாம். வாய் வார்த்தைகள் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
அத்துடன் நாங்கள் கூறுவதெல்லாம் அரசியலமைப்பில் உள்வாங்குவார்களா என்ற எண்ணம் கொள்ளாமல் முதலில் கருத்துக்களை பதிவு செய்வோம். அதன் பின்னர் அவற்றை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். எனவே, அனைத்து தமிழ் மக்களும் இச் சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.