அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்காக வழங்கப்பட்டு வந்த நிரந்தர பாதுகாப்பு விசாவுக்கு பதிலாக தற்காலிக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவுஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மெல்போர்ன் நகரிலிருந்து வந்த இராக், ஈரான், இலங்கை, சூடான், சோமாலியா, மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் சில கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அகதிகளுக்காக 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகிறது. இவர்கள் முக்கிய நகரங்களுக்கு வெளியே வசிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்ட பிறகே இந்த விசா வழங்கப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் அரசு கடந்த 2013ஆம் ஆண்டு பதவியேற்றப்பட்ட பிறகு, படகு மூலம் அவுஸ்திரேலியா வரும் அகதிகளுக்கு தற்காலிமாக விசா வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.