இதில் முதல் முறையாக பங்களாதேஷ் அணி ஆசியக் கிண்ணத்தை வென்று சாதிக்குமா அல்லது 6ஆவது முறையாக ஆசியக்கிண்ணத்தை இந்தியா தன்வசப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடர் இம்முறை பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. இதுவரையும் ஒருநாள் போட்டியாக விளையாடப்பட்டு வந்துள்ள நிலையில், இந்தத் தொடர் இம்முறை இருபதுக்கு 20 போட்டியாக மாற்றம் பெற்றது.
இதில் ரவுண்ட் ரொபின் சுற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஆசியக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பங்களாதேஷும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகள் மோதிய இந்தத் தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியைத் தழுவாமல் இறுதிப்போட்டிக்கு இந்தியா நுழைந்தது.
இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போகும் பங்களாதேஷோ, நடப்பு சம்பியனான இலங்கையையும், ஆசியாவின் பலம்பொருந்திய இன்னொரு அணியான பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.
இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய இலங்கை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இலங்கை தனது முதல் போட்டியில் கற்றுக்குட்டி அணியான ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
அடுத்து பங்களாதேஷுடன் மோதிய போட்டியில் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு இந்தியாவுடனான போட்டியிலும் தோல்வியடைந்ததனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்தது. 8 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானை வீழ்த்தியதால் இறுதிப்போட்டிக்கு பங்களாதேஷ் முன்னேறியது. பாகிஸ்தானின் இந்தத் தோல்வியோடு இலங்கையும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
இதுவரையில் இந்திய அணி 5 முறை ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ளது. அதேபோல் இலங்கையும் ஆசியக்கிண்ணத்தை ௫ முறை சுவீகரித்துக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஒருமுறை வென்றுள்ளது. இதில் பங்களாதேஷ் அணி ஆசியக் கிண்ணத்தை இதுவரையில் வென்றதில்லை.
தொடரை நடத்தும் பங்களாதேஷ் நாளை 7 மணிக்கு இந்தியாவை எதிர்த்தாடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் ஆசியாவின் சம்பியனாவது பங்களாதேஷா அல்லது இந்தியாவா என்று.