ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர், மகளிர் இரு பிரிவிலும் இந்திய அணி, சிங்கப்பூர் அணியை தோற்கடித்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது ஹைதராபாத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது, இதன் லீக் ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூர் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. ஆடவர் பிரிவில், ஒற்றையர், மாற்று ஒற்றையர், இரட்டையர் என அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று 5-0 என்ற ஆட்ட கணக்கில் சிங்கப்பூர் அணியை வென்றனர். ஒற்றையர் பிரிவில் அஜய் ஜெயராம், பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துள்ளது. இதே போல், மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, சிங்கப்பூர் அணியை எதிர்த்து விளையாடினர். இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான சுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா இணை, ஒற்றையர் பிரிவில் துளசி, மற்றும் சிந்து ஆகியோர் 5-0 என்ற கணக்கில் எதிரணி வீராங்கனைகளை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.