படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியிலிருந்த இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் மக்கள் குடியிருந்த வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்’ கலந்துரையாடல் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றிருந்தது. ஆங்கு கருத்து தெரிவித்த வலி.வடக்கு மக்கள் கடந்த ஆட்சி காலத்தில் இருந்தது போலவே இடம்பெயர்ந்த மக்கள் இன்றும் வாழ்கின்றனர். இந்த ஆட்சி மாற்றத்தினால் எதனையும் புதிதாக அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்று வழிபாடுகளை நடத்தி பொங்கல் செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்து இருந்தனர்.
கடந்தமுறை தைப்பூச தினத்தன்று இந்தக் கோயிலுக்கு சென்ற போது, அங்கு இருந்த பிள்ளையார் கோவில் தற்போது இடித்து அழிக்கப்பட்டு அந்த கோயில் இருந்த இடத்தில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்தமுறை இருந்த பலவீடுகள் இடித்தழிக்கப்பட்டு விடுதி கட்டியுள்ளார்கள்.
அதேபோன்று கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை கோயிலுக்கு செல்ல அனுமதித்து இருந்த காலப்பகுதியில் சிறிய சேதத்துடன் இருந்தன. தற்போது அந்த வீடுகள் மற்றும் கோயில்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டு மண் மேடாக காட்சியளிக்கின்றன. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஊடாக நாம் எமது சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என நினைத்து இருந்த போதும் மக்கள் ஏமாற்றப்பட்டேயுள்ளனர். இந்த ஆட்சி மாற்றத்திலும் அது சாத்தியப்படும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே தற்போது இல்லாமல் போயுள்ளது.