ஆன்டர்சனுடன் மோதல் ஜடேஜாவிற்கு அபராதம்

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனுடனான மோதல் பிரச்சினையில் விளையாட்டின் உத்வேகத்திற்கு எதிராக நடந்து கொண்டதாக இந்திய ஆல்–ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஐ.சி.சி. போட்டி நடுவர் அபராதம் விதித்துள்ளார். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக வெடித்தது. 2–வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் ரவீந்திர ஜடேஜா பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த போது, அவரை வம்புக்கு இழுத்த ஆண்டர்சன் வசைமாரி பொழிந்ததுடன், திடீரென அவரை தள்ளிவிட்டு நிலைகுலைய செய்தார்.

ஆண்டர்சனின் நடவடிக்கையால் அதிர்ச்சிக்குள்ளான இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நடத்தை விதி லெவல்3–ஐ மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்தது. ஆண்டர்சன் மீதான புகார் குறித்து ஐ.சி.சி.யால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ் (ஆஸ்திரேலியர்) 3–வது டெஸ்ட் முடிந்த மறுநாள் (ஆகஸ்டு 1–ந்தேதி) வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்துகிறார். இதில் அவர் குற்றவாளி என்பது நிரூபணமானால் அவருக்கு 2 டெஸ்ட் முதல் 4 டெஸ்ட் வரை தடை விதிக்கப்படும்.

இதற்கிடையே இங்கிலாந்து அணி நிர்வாகம் பதிலடியாக ஜடேஜா மீது ஐ.சி.சி.யிடம் புகார் மனுவை தாக்கல் செய்தது. ஆண்டர்சனை மிரட்டும் தோரணையில் அவரை நோக்கி ஜடேஜா ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், நடத்தை விதி லெவல்2–ஐ மீறியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து போட்டி நடுவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் பூன் நேற்று சவுதம்டனில் நேற்று விசாரணை நடத்தினார். ஆண்டர்சன், ஜடேஜா மற்றும் இரண்டு தரப்பு வழக்கறிஞர்கள், ஐ.சி.சி.யின் வழக்கறிஞர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணையின் போது ஆஜரானார்கள். 2½ மணி நேரம் விசாரணை நீடித்தது. சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியையும் போட்டு பார்த்தார்.

விசாரணை முடிவில் போட்டி நடுவர் டேவிட் பூன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டது உண்மை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது போன்ற நடவடிக்கைகள் உண்மையான விளையாட்டின் உத்வேகத்திற்கு உகந்தது கிடையாது. இச்சம்பவம் அந்த இடத்தில் நடந்திருக்கக்கூடாது.

என்றாலும் லெவல்–2 விதியை மீறீயதாக ஜடேஜா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு எனக்கு திருப்திகரமாக இல்லை. சாட்சியங்களை விசாரித்து பார்த்ததில், அவர் நடத்தை விதி லெவல்1–ஐ மீறி தவறு செய்திருக்கிறார் என்பது தான் சரி. இதன் அடிப்படையில் அவருக்கு முதலாவது டெஸ்ட் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை லெவல்–2 குற்றச்சாட்டு ஊர்ஜிதம் ஆகியிருந்தால் ஜடேஜாவுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒரு நாள் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அபராதத்துடன் தப்பினார்.

ஆனால் ஐ.சி.சி.யின் இந்த தீர்ப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஜடேஜா விவகாரத்தில் ஐ.சி.சி. போட்டி நடுவர் எடுத்த முடிவை கிரிக்கெட் வாரியம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். ஜடேஜா எந்த தவறும் செய்யவில்லை என்று நம்புகிறோம். அவருக்கு முழு ஆதரவு அளிப்போம். இந்த முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு’ என்று கூறப்பட்டுள்ளது.

அணிஅதிர்ச்சிக்குள்ளானஅவர்ஆண்டர்சனின்இந்தியநடத்தைநடவடிக்கையால்நிர்வாகம்மீதுவிதி
Comments (0)
Add Comment