ஆழ ஊடுருவும் இராணுவம் நடத்திய மன்னார் பாசித்தென்றல் படுகொலை! 10 ஆண்டுகள்! 

2006ஆம் ஆண்டு. வன்னியில் தெருக்களின் மக்கள் செல்ல அஞ்சிய காலம். மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் சைக்கிளில் செல்பவர்னகளையும் கிளைமோர் விட்டுவைக்காத நாட்கள். இலங்கை அரசின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதல்களில் பள்ளி மாணவர்கள் முதல் மத குருக்கள் வரை பலர் பலிகொள்ளப்பட்ட குரூரம்.

அப்படி ஒரு மற்ற முடியாத நிகழ்வே ஆழ ஊடுருவும் இராணுவம் நடத்திய மன்னார் பாசித்தென்றல் படுகொலை. பாசித்தென்றல் படுகொலை நடைபெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் சமாதான ஒப்பந்தம் இருந்த காலத்தில் அறிவிக்கப்படாத யுத்தம் நிகழ்ந்த நாட்களில் நிகழ்ந்த இந்த தாக்குதல்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியாக இருந்தது முசலி. சிலாவத்துறையில் விடுதலைப் புலிகளின் நிலைகள்மீது தாக்குதல்களை மேற்கொண்டது இலங்கை இராணுவம். சிலாவத்துறையிலிருந்து மக்கள் இடம்பெயரத் தொட்ங்கினார்கள். அப்படி இடம்பெயர்ந்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர் இலங்கை அரசின் ஆழ ஊடுருவும் அணியினர்.

அது ஒரு சனிக்கிழமை. 8.45 மணியிருக்கும். கொக்குப்படையானுக்கும் முள்ளிக்குளத்துக்கும் இடையிலான வழி. செல் மழைகளுக்குள்ளும் விமானத் தாக்குதல்களுக்குள்ளும் அஞ்சி அஞ்சி உயிரை பாதுகாக்க சனங்கள் ஓடிக்கொண்டிருந்தனர். பசி, களைப்பு எதையும் அறியாமல் களைத்து கண்ணயந்தவர்கள் திடுக்கிட்டனர். எதிர்பாராமல் வெடித்த கிளைமோர் தூக்கி எறிந்தது சனங்களின் வாகனத்தை.

பெண்களும் சிறுவர்களுமாக 13பேர் வாகனத்தில் பயணிக்க அவர்களில் எட்டுப் பேர் அந்த இடத்திலேயே மிகப் பரிதாபகரமாக பலியாகினர். ஒருவர் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை கொண்டு சென்ற நோயாளார் காவு வாகனத்தை “மருத்துவமனைக்குச் செல்ல முடியாது!” என முருங்கனில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பினர் இராணுவத்தினர்.

கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டோர் விபரம்:

1. திருமதி ஜேன்ஸ் (வயது 32)

2. திருமதி ஜேன்சின் மைத்துனரான ஒஸ்கார் (வயது 22)

3. தாக்குதலுக்கு இலக்கான வாகனத்தின் சாரதியான செல்குமார்

4. திருமதி செல்வகுமார் (வயது 32)

5. திரு திருமதி செல்வகுமாரின் மகன் (வயது 5)

6. செல்வகுமாரின் மாமியார் (வயது 55)

7. சுபாஸ்கரன்

8. பெண்ணொருவரின் பெயர் கிடைக்கப்பெறவில்லை.

9. குழந்தையின் பெயர் கிடைக்கப்பெறவில்லை.

புகைப்படம் – காயம் பட்ட சிறுவன் ஒருவன்

கிளைமோர்படுகொலைபாசித்தென்றல்மன்னார்
Comments (0)
Add Comment