இங்கிலாந்து 2வது நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்கள் என வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 148 ஓட்டங்களில் அடங்கியது. அணித்தலைவர் டோனி (82 ஓட்டங்கள்), முரளிவிஜய்(18 ஓட்டங்கள்), அஸ்வின் (13 ஓட்டங்கள்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அணித்தலைவர் அலஸ்டயர் குக்கும் (24 ஓட்டங்கள்), சாம் ராப்சனும் (33 ஓட்டங்கள்) முந்தைய நாள் சிறப்பான ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடங்கினர். ராப்சன் (37 ஓட்டங்கள்) வருண் ஆரோனின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
இதன் பின்னர் அணித்தலைவர் குக்கும், கேரி பேலன்சும் இணைந்தனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் கடுமையாக போராட வேண்டி இருந்தது. இந்தியாவின் மோசமாக களத்தடுப்பு அவர்களுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 148 ஓட்டங்களுடன் பலமான நிலையில் தென்பட்டது.
பின்னர் ஓட்டங்கள் 191 என எட்டிய போது குக் 79 ஓட்டங்களில் (183 பந்து, 9 பவுண்டரி), வெளியேறினார். இதைத் தொடர்ந்து பேலன்ஸ்(64 ஓட்டங்கள்),பெல்(7 ஓட்டங்கள்),மொயீன் அலி(14 ஓட்டங்கள்), பட்லர்(45 ஓட்டங்கள்), வோக்ஸ்(0) ஆகியோர் வெளியேறினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
2வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 385 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்திய தரப்பில் அஸ்வின், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியில் இருந்து மீள்வது என்பது கடினமான விடமாகவே உள்ளது.