டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (70), விராட் கோலி (65), டோனி (41), மற்றும் கேதர் ஜாதவ் (39 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கப்தில், லாதம் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
உமேஷ் யாதவ் வீசிய 4-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார். அடுத்து லாதம் உடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். லாதம் 19 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 63 ரன்னாக இருக்கும்போது வில்லியம்சன் 27 ரன்னில் அக்சார் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 40 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.
அதன்பின் டெய்லரை 19 ரன்னில் வெளியேற்றினார் அமித் மிஸ்ரா. அதன்பின் வந்தவர்களை மிஸ்ரா தனது மாயாஜால பந்து வீச்சால் அனைவரையும் ஒற்றையிலக்க ரன்னில் வெளியில் அனுப்பிக் கொண்டே இருந்தார். குறிப்பாக வாட்லிங், சவுத்தி மற்றும் சோதியை டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெடடுக்களை கைப்பற்றியதால் நியூசிலாந்து அணி 23.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 79 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 3-2 எனக்கைப்பற்றியது.