இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வியடைந்ததற்கு ஐ.பி.எல் போட்டியை குறைகூறுவது தவறு என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் தொடரை மோசமாக பறிகொடுத்தது.
இந்த தோல்வியை தொடர்ந்து, ஐ.பி.எல் போட்டிகளால் தான் வீரர்கள் சரியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் இந்த கருத்து பற்றி இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் கூறுகையில், இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதால் தான் டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்று கூறுவதை ஏற்கமுடியாது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் சதமடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அதிக ஓட்டங்கள் குவித்தார்.அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடியவர் தான். இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளில் சென்று அதிக உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் சிறப்பான அனுபவம் கிடைத்துவிடும்.
இதற்கு முன்னோட்டமாக புஜாரா இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி போட்டிகளில் விளையாட முடிவெடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. இந்திய பந்து வீச்சாளர்களும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் பந்து வீசுவதில் அனுபவம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.