தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டுக்கு தயாராகி வரும் இந்திய கால்பந்து அணி, அதற்கு முன்பு பாகிஸ்தானுடன் இரண்டு நட்புறவு ரீதியிலான சர்வதேச போட்டிகளில் மோத இருக்கிறது. இது 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாகும். இவ்விரு அணிகள் இடையே இது போன்ற தொடர் நடப்பது 2005–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
இதன்படி இந்தியா–பாகிஸ்தான் இடையிலான முதலாவது கால்பந்து ஆட்டம் பெங்களூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இது ஜூனியர் ஆட்டம் என்றாலும், ஒவ்வொரு அணியிலும் 23 வயதுக்கு மேற்பட்டோர் 3 பேர் இடம் பெறலாம். தரவரிசையில் பாகிஸ்தானை விட இந்திய அணி (150–வது இடம்) 15 இடங்கள் முன்னிலை வகிக்கிறது. இது தவிர போட்டி உள்ளூரில் அரங்கேறுவதால் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக தெரிகிறது.
ஆனால் நாங்கள் இதை சாதாரணமான ஆட்டமாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய கேப்டன் சுனில் சேத்ரி ஏற்கனவே கூறியிருக்கிறார். இதில் வெற்றி பெற்றால், அது ஆசிய போட்டிக்கு மனஉறுதியுடன் செல்ல உதவிகரமாக இருக்கும். இதையொட்டி பெங்களூர் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 2–வது ஆட்டம் 20–ந்தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது.