இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் வாரியங்களுக்கு இடையிலான கிரிக்கெட் உறவில் பல்வேறு விவகாரங்களால் ஓராண்டுக்கு மேலாக நீடித்த முட்டுக்கட்டை பேச்சுவார்த்தை மூலம் நீங்கியுள்ளது. இந்திய அணி அடுத்த ஆண்டு அங்கு சென்று விளையாட இருக்கிறது. வெய்ன் பிராவோ தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வந்து விளையாடியது.
அப்போது தர்மசாலாவில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி திடீரென தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பியது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கும், அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையிலான ஊதிய ஒப்பந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் அந்த அணி வீரர்கள் இந்திய தொடரில் தொடர்ந்து விளையாட மறுத்து விட்டனர். ஒரு நாள் தொடரில் மேற்கொண்டு ஒரு ஆட்டம், 3 டெஸ்ட் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் அந்த அணி விளையாட வேண்டி இருந்தது. இதனால் இவ்விரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் உறவில் விரிசல் உருவானது.
கடும் அதிர்ச்சியும், அதிருப்திக்கும் உள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம், வெஸ்ட் இண்டீஸ் உடனான நேரடி கிரிக்கெட் தொடரை துண்டித்துக் கொண்டது. மேலும் சட்ட ரீதியான நடவடிக்கையை தொடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம் தொடரை பாதியில் கைவிட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.277 கோடி தர வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தங்களால் அந்த தொகையை தர இயலாது என்றும், நடந்த நிகழ்வுகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், இந்திய வாரியத்திற்கு சமாதான தூது அனுப்பியது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங் மனோகருடன், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் டேவ் கேமரூன் போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒருமித்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு (2016) ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்டில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் டேவ் கேமரூன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அத்துடன் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்ட இந்திய தொடரை பின்னொரு தேதியில் முழுமையாக விளையாடி நிறைவு செய்வதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும், அதன் வீரர்களின் சங்கமும் உத்தரவாதம் அளித்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே வெஸ்ட் இண்டீஸ் உடனான கிரிக்கெட் உறவை மீண்டும் தொடர்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதித்து இருக்கிறது. விட்டு போன தொடருக்கு பரிகாரம் தேடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது.