இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ மைதானத்தில் நாளை (21-ந் தேதி) தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 4 டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இருந்ததால் நம்பிக்கையுடன் காணப்படுகிறது.
தொடக்க வீரர்கள் வரிசையில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. முரளி விஜய்யும், ஷிகார் தவானும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள். பயிற்சி ஆட்டங்களில் இரண்டு அரை சதம் அடித்த ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.
மிடில் ஆர்டர் வரிசையில் புஜாரா, கேப்டன் விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா உள்ளனர். இவர்களில் ஒருவர் நீக்கப்பட்டால் தான் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பயிற்சி ஆட்டத்தில் தவான் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்தனர். டெஸ்டில் வெல்ல ரன் குவிப்பு முக்கியமானது. இதனால் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி ரன் குவிக்க வேண்டும்.
சுழற்பந்து வீரர் அஸ்வினை நம்பி தான் பந்துவீச்சே இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்கள் சுழற்பந்துக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா அவருக்கு துணையாக இருப்பார்.
வேகப்பந்தில் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் உள்ளனர். இதில் இருவருக்குத் தான் வாய்ப்பு கிடைக்கும்.
காயம் அடைந்து உடல் தகுதி பெற்ற முகமது ஷமி நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வது கேப்டனுக்கு சவாலாக இருக்கும்.
கும்ப்ளே- விராட் கோலி புதிய கூட்டணியில் இந்திய அணி சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இதனால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் 4-வது முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்தில் கோலி இருக்கிறார்.
கடைசியாக 2011-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்த டோனி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடியது. இதில் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்த இயலும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.
ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டிஸ் அணி அனுபவமும், புதுமையையும் கொண்டது. சாமுவேல்ஸ், டாரன் பிராவோ, பிராத்வெயிட் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.
வேகப்பந்தில் புதுமுக வீரர்கள் முத்திரை பதிக்க கூடியவர்கள் சுழற்பந்து வீரர் தேவேந்திர பிஷூ இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுப்பார்.
வெஸ்ட்இண்டீஸ் அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. கடைசியாக விளையாடிய தொடரில் 8 டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. இந்திய அணி சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகார் தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, ஷர்துல் தாக்கூர்.
வெஸ்ட் இண்டீஸ்: ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெயிட் (துணை கேப்டன்), சாமுவேல்ஸ், டாரன் பிராவோ, லியான் ஜான்சன், பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெயிட், ராஜேந்திர சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், டவ்ரிச், கும்மின்ஸ், கேப்ரியல், தேவேந்திர பிஷூ.