மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஈஸ்டர் குண்டுதாரி மொஹமட் ஆஷாத்தின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரிஸ்வான் முன்னிலையில் இந்த உடற்பாகங்களை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றது.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மட்டக்களப்பில் தமது பகுதிகளில் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனால் குறித்த உடற்பாகங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் திகதி இரவோடு இரவாக இரகசியமாக புதைக்கப்பட்டது. இந்த விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை அகற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத பகுதியில் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் கடந்த 30ஆம் திகதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்களை அகற்றும் பணி தற்போது முன்னெடுக்கப்படுகிறது.