இலங்கையில் இனப்படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தப்பிக்க முடியாது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகியிருந்தார்.
இதன் பின்னர், நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ.விடம் தேசதுரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தது ஏன்? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “மேன்முறையீட்டில் தண்டனை கொடுத்தால் ஏற்பேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதால் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். எத்தகைய சட்ட வரையறைகள் தடுத்தாலும் ஈழத்தில் நடைபெற்ற அநியாயங்களை வெளிப்படுத்த எப்போதும் தயங்க மாட்டேன். இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதேபோன்று, இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது” என குறிப்பிட்டார்.
தேசதுரோக வழக்கில் வைகோவிற்கு ஒராண்டு கால சிறையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதி யுத்தம் இலங்கையில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சர்வதேச ரீதியில் படுமோசமான குற்றச் செயல் என்று வரையறுக்கப்பட்டுள்ள இனப்படுகொலை வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்றதாகவும் அதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் அமைப்புக்கள் சில வலியுறுத்தி வருகின்ற நிலையில் வைகோ இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.